பதிவு செய்த நாள்
08
ஜூன்
2023
10:32
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆறு மாநிலங்களுக்கு விஜய யாத்திரை மேற்கொண்டு, காசியில் சாதுர்மாஸ்ய விரத சிறப்பு பூஜை வழிபாடு மேற்கொள்கிறார்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நாடு முழுவதும் விஜய யாத்திரையை துவக்கியுள்ளார். இதன்படி, திருமடங்களில் தங்கி, சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்துகிறார். கர்நாடக மாநிலம், பெங்களூரு கமலாலயத்தில் பூஜை வழிபாடு பூர்த்தியானதும், ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இன்று(8ம் தேதி) மாலை புறப்பட்டு, நாளை (9ம் தேதி) ஆந்திரா - அனந்தப்பூர் செல்கிறார். அங்குள்ள அபயாஞ்சநேய சுவாமி கோவிலில் தங்கி சிறப்பு பூஜை நடத்துகிறார். நாளையும், 10ம் தேதியும், கர்னுால் ஸ்ரீசங்கரா மந்திர் மற்றும் மகாவித்யா பீடத்திலும் அருளாசி வழங்குகிறார். வரும் 11ம் தேதி தெலுங்கானா செல்லும் சுவாமிகள், வாரங்கல் ஸ்ரீகாஞ்சி பீடம் ஸ்ரீவித்யா சரஸ்வதி கோவிலில், 13ம் தேதி வரையும், வரும், 14 முதல், 17ம் தேதி வரை நிஜாமாபாத் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், அருளாசி வழங்குகிறார். வரும், 18ம் தேதி, நிர்மல் பகுதி, நிர்மல் பிராமண சேவா சங்க கல்யாண மண்டபத்திலும், 19, 20ம் தேதிகளில், அதிலாபாத் ராமாலயத்திலும் சிறப்பு பூஜைகள் நடத்தி, பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். மகாராஷ்டிரா மாநிலத்துக்கு செல்லும் சுவாமிகள், 21, 22ம் தேதிகளில், நாக்பூர் ராம்நகரில் உள்ள பகவத்பாத சபா; 23 முதல், 25ம் தேதி வரை, ராம்டெக் கவிகுல்குரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் அரங்கில், சிறப்பு பூஜை நடத்துகிறார். மத்திய பிரதேசம் செல்லும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 26, 27ம் தேதிகளில், ஜபல்பூர் ஸ்ரீபாலாஜி கோவிலில் தங்கி, சிறப்பு பூஜை வழிபாடு நடத்துகிறார்; 28ம் தேதி நிராலா - ரிவா சரஸ்வதி சிஷூ மந்திரில் தங்கி அருளாசி வழங்க இருக்கிறார்.
வியாச பூஜை: தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் செல்லும் சுவாமிகள், விஜய யாத்திரையின் முக்கிய நிகழ்வான, வியாச பூஜை மற்றும், சதுர்மாஸ்ய விரத பூஜைகளை நடத்துகிறார். வரும், 29 முதல், ஜூலை 5ம் தேதி வரை, பிரயக்ராஜில் தங்கும் சுவாமிகள், பெனிபந்த் ஸ்ரீசங்கர விமான மண்டபத்தில் தங்கி, ஜூலை 3ம் தேதி, வியாச பூஜை நடத்தி, அருளாசி வழங்க உள்ளார். ஜூலை 6ம் தேதி முதல் செப்., 29ம் தேதி வரை, வாரணாசியில் தங்கும் சுவாமிகள், ஹனுமன்கட்டில் உள்ள, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் காசி கிளையில் தங்கி, அருளாசி வழங்குகிறார். விஜய யாத்திரையின் முக்கியத்துவம் பெற்ற வழிபாடாக கருதப்படும், சாதுர்மாஸ்ய விரதம் பூஜைகளை மேற்கொண்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்க இருக்கிறார். -நமது நிருபர்-