பதிவு செய்த நாள்
13
ஜூன்
2023
12:06
கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டனுக்கு, திருவாவடுதுறை ஆதீனம், நீர்வள சீராளன் பட்டம், பொற்கிழி வழங்கி கவுரவித்துள்ளது. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, 2017ல் துவக்கப்பட்டது; நீர் நிலைகளை மீட்டெடுக்க, இதன் உறுப்பினர்கள் ஒவ்வொரு வாரமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். தொடர்ச்சியாக, 291 வாரங்கள் களப்பணி ஆற்றியிருக்கின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளில், 12 குட்டைகள் துார்வாரப்பட்டு இருக்கின்றன. 250 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. வெள்ளலுார் ராஜவாய்க்கால், குனியமுத்துார் கால்வாய், காட்டம்பட்டி கால்வாய் என, 21.5 கி.மீ., நீளமுள்ள கால்வாய் துார்வாரப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட்டுகளில், மியாவாக்கி முறையில், 8,750 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இன்னும் எண்ணற்ற சுற்றுச்சூழல் பணிகள், இவ்வமைப்பினரால் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்த அமைப்பின் செயல்பாடுகளை பாராட்டி, திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமஹா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஜென்ம நட்சத்திர விழாவில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடுகளை அங்கீரித்து, ஒருங்கிணைப்பாளர் மணிகண்டனுக்கு, நீர்வள சீராளன் என்ற பட்டமும், பொற்கிழியும் வழங்கி பாராட்டினார்.