பதிவு செய்த நாள்
13
ஜூன்
2023
12:06
ஆழ்வார்திருநகரி: நவதிருப்பதிகளில், 9 வது திருப்பதியான ஆழ்வார்திருநகரி, ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று கருடசேவை நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடந்த, வைகாசி மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று வருஷாபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று காலை 5 மணிக்கு விஸ்வரூபம், தொடர்ந்து கும்பம் வைத்து ஹோமம், பூர்ணாகுதி, சிறப்பு திருமஞ்சனம். தீபாராதனை. நாலாயிர திவ்யப்பிரபந்தம், 12:00 மணிக்கு சாத்துமுறை. தீர்த்தம், சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு சாயரட்சை, 6:30 மணிக்கு சுவாமிகள் ஆதிநாதர் ஆழ்வார் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். இரவு 7 :00 மணிக்கு கருட வாகனத்தில் காட்சி தந்தார். பின்னர் மாட வீதி உலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், அர்ச்சகர்கள் கண்ணன். விவேக், நிர்வாக அதிகாரி அஜித்முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பாவெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.