பதிவு செய்த நாள்
13
ஜூன்
2023
12:06
திருச்செந்துார்: திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் முருகன், வள்ளி திருமணத்தை, 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரேவண்ணகலரில் ஆடை அணிந்து கும்மி பாட்டு பாடி, நடனமாடி விளக்கியது பக்தர்கள் கவனத்தை ஈர்த்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை கொங்கு நாடு கலைக்குழு சார்பில், ஆண்டுதோறும் வள்ளியம்மாள் வரலாறு குறித்தும், வள்ளி, முருகன் திருமணம் குறித்து விளக்கும் வகையில், ஏதாவது ஒரு முருகன் கோயிலில் கும்மி பாட்டு பாடி, நடனமாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தாண்டு, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில், ஆசிரியர் தமிழச்சி தாரணி தலைமையில், சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் முருகன், வள்ளி திருமண கதையைகும்மி பாட்டு முறையில் நடனமாடி பக்தர்களுக்கு விளக்கினர். இதில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 7 வயது சிறுமி முதல் 70 வயதுள்ள பெண்கள் 300 பேர் கலந்து கொண்டு நடனமாடினார். இது குறித்து அவர்கள் கூறுகையில்,வழிபாட்டு முறையான இந்த கும்மி பாட்டு நடனம் ஆடுவதால், மன அழுத்தம் நீங்கி உடலும் மனமும் ஆரோக்கியம் அடைவதாகவும், தன்னம்பிக்கை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர். பெண்கள் வயது வித்தியாசம் இன்றி ஒரே வண்ணகலரில் ஆடை அணிந்து கோயில் கடற்கரையில் வள்ளி,முருகன் திருமண கதையை விளக்கி கும்மி அடித்து நடனமாடி வழிபாடு செய்ததை கோயிலுக்கு வந்த மற்ற பக்தர்களுக்கு பக்தியுடன் கண்டுகளித்தனர்.