பதிவு செய்த நாள்
15
ஜூன்
2023
12:06
ஜம்மு: பக்தர்களுக்கு பிரசாதத்தை விரைவாக வழங்குவதற்காக, கூரியர் நிறுவனமான, டி.டி.டி.சி., உடன், வைஷ்ணவ தேவி கோவில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின், ரியாசி மாவட்டத்தில் உள்ள கட்ரா என்ற இடத்தில் வைஷ்ணவ தேவி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இந்நிலையில், பக்தர்களுக்கு பிரசாதத்தை விரைவாக வழங்குவதற்காக, கூரியர் நிறுவனமான டி.டி.டி.சி., உடன், வைஷ்ணவ தேவி கோவில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து, கோவில் தலைமை செயல் அதிகாரி அன்ஷுல் கர்க் நேற்று கூறியதாவது: துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா வழிகாட்டுதலின்படி, பக்தர்களுக்கு பிரசாதத்தை விரைவாக வழங்குவதற்கு, டி.டி.டி.சி., நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ளோம். கோவில் இணையதளம் மற்றும் கோவில் மொபைல் செயலி வாயிலாக, டெலிவரி சேவையை தேர்வு செய்யும் பக்தர்கள், 100 முதல் 2,100 ரூபாய் வரை, ஐந்து வகை பிரசாதங்களை ஆர்டர் செய்யலாம். இந்த வசதியை நாடு முழுதும் உள்ள பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வட மாநிலங்களில் இருந்து ஆர்டர் செய்யும் பக்தர்களுக்கு, 48 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.