நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்க அமித்ஷாவுக்கு அழைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2023 11:06
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என பா.ஜ., சட்டசபை குழு தலைவர் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து நெல்லையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் வரும் ஜூலை 2ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளோம். விழாவில் அவர் பங்கேற்பார் என நம்புகிறோம். தமிழகத்தில் கிராமப்புற, நகர்ப்புற வீட்டு வசதி திட்டங்கள், ரயில்வே திட்டங்கள், விவசாயிகளுக்கான திட்டங்கள் என பல்வேறு வகை திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி பங்கேற்ற விழாக்களில் தமிழக முதல்வரும் கலந்து கொண்டுள்ளார். தற்போது தமிழகத்திற்கு மத்திய அரசு திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத் துறை, வருமான வரித் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்த துறைகள் செயல்படுவதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதிமுக ஆட்சியிலும் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் அப்போது இந்த சோதனைகளை வரவேற்ற கட்சி தலைவர்கள் தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது. தமிழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்ததற்கும் இந்த சோதனைக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தமிழக பா.ஜ தலைவர் அண்ணாலை தரக்குறைவாக பேசவில்லை. தற்போது அதிமுக, பா.ஜ., கட்சியினருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அதிமுக பா.ஜ., கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பார்லிமென்ட் தேர்தலில் கூட்டணி குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அகில இந்திய பா.ஜ.,தலைவர்தான் முடிவு செய்வர். வரும் பார்லிமென்ட் தேர்தலில் 100 சதவீதம் பா.ஜ., வெற்றி பெற்று பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்பார். அடுத்த தேர்தலில் பிரதமராக தமிழர் வந்தால் சந்தோஷம்தான். தலைமை அனுமதித்தால் நெல்லை தொகுதியில் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது நிர்வாகிகள் நீலமுரளி யாதவ், வக்கீல் குற்றாலநாதன், முத்து பலவேசம், காசிராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.