தாதன்குளம் விநாயகர் கோயில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2023 05:06
அருப்புக்கோட்டை: தமிழ்நாடு திருக்கோயில்கள் தொழிலாளர் யூனியன் மண்டல செயலாளர் பூபதி விடுத்துள்ள அறிக்கை : அருப்புக்கோட்டை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாதன்குளம் விநாயகர் கோயில் திருப்பணிகள் செய்வதற்காக 2022, ஏப்ரலில் அதிகாரிகள் முன்னிலையில் ஆகம விதிகளின்படி பாலாலயம் செய்யப்பட்டது. கோயிலின் மூலஸ்தான விக்கிரகங்கள் பீடத்திலிருந்து அகற்றாமல் ஆகம விதிகளின்படி பாலாலயம் செய்து அதன் பிம்பங்களை அத்தி மர பலகைகளில் வைத்து நித்திய பூஜைகள்செய்யப்பட்டது. இந்நிலையில் ஜூன் 7 ம் தேதி எந்தவித முன்னறிவிப்பு இன்றி, கோவிலுக்கு வந்த செயல் அலுவலர் லட்சுமணன் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாலாலயம் செய்யப்பட்டு துணியால் மூடப்பட்டிருந்த மூலஸ்தான கற்சிலை விக்கிரகங்களை திருப்பணி வேலைகள் முடியாமல், குடமுழுக்கு செய்யாமல், பக்தர்களுக்கு தரிசனம் செய்வதற்கு ஆகம விதிகளை மீறி அனுமதி வழங்கி உள்ளார். இதனால் திருப்பணி வேலைகள் முடியாத நிலையிலும் கும்பாபிஷேகம் நடத்தாமலும் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதித்ததால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏதும் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அதிர்ச்சியில் உள்ளனர். கோவிலுக்கும் அரசுக்கும் களங்கம் ஏற்படும் விதத்திலும் நடந்து கொண்ட செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை மனுவை முதலமைச்சர் தனிப்பிரிவு, இந்து சமய அறநிலையத்துறை செயலர், ஆணையர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.