சபரிமலை: ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று 16ம் தேதி காலை முதல் நெய்யபிஷேகம் துவங்கியது.
ஆனி மாத பூஜைகளுக்காக நேற்று 15ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றினார். தொடர்ந்து ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று 16ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெற்றது. 20ம் தேதி வரை தினமும் காலையில் உஷபூஜை, மதியம் களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்சபூஜை, மாலையில் தீபாராதனை , புஷ்பாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு படிபூஜை, 9:00 மணிக்கு அத்தாழபூஜை ஆகியவை நடைபெறும். எல்லா நாட்களிலும் அதிகாலை 5:00 முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலை 5:00 முதல் இரவு 10:00 மணி வரையிலும் தரிசனம் நடத்தலாம். பூஜைகள் நிறைவு பெற்று 20ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.