திருத்தணி: திருத்தணி கோவிலில் ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நேற்று வைகாசி மாத கிருத்திகை விழாவையொட்டி அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி, தேர் வீதியில் வலம் வந்து அருள்பாலித்தார். l ஆர்.கே.பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை கிராமத்தின் தென்மேற்கில் அமைந்துள்ளது நெல்லிக்குன்றம் சுப்ரமணிய சுவாமி மலைக்கோவில். கிருத்திகையை ஒட்டி நேற்று காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, மலைக்கோவில் வளாகத்தில், உற்சவர் பெருமான் உள்புறப்பாடு எழுந்தருளினார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கரிக்கல் முருகர் கோவில் மற்றும் நெடியம் கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவில்களிலும் சிறப்பு உற்சவம் நடந்தது.