பதிவு செய்த நாள்
17
ஜூன்
2023
03:06
கோவை ; கோவை மாவட்டம், பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டது. இதனால், கோவையில் பல்வேறு இடங்களில் மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சி நடத்தி, பல்வேறு காலகட்டங்களை சேர்ந்த முதுமக்கள் தாழி, காசுகள், சிற்பங்கள், நடுகல், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகளை கண்டுபிடித்துள்ளனர். இதில், கோவையின் மேற்கு புறநகரான தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் பல இடங்களிலும், பல்வேறு வரலாற்று சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள நடுகல், கி.பி., 17ம் நூற்றாண்டை சேர்ந்ததும், ஏறு தழுவுதல் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மாரியம்மன் கோவில் புனரமைப்புக்கு பின், இந்த 17ம் நூற்றாண்டை சேர்ந்த நடு கல்லை, கோவில் நுழைவாயில் அருகில் வைத்து, காவல் தெய்வமாக, பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். அதே போல, குப்பேபாளையத்தில் உள்ள பெருமாள் கோவிலில் உள்ள புலிகுத்தி கல்லையும் பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். கொண்டையம்பாளையத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் உள்ள சிறு கோவிலிலும், நடுகல்லை பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.