பதிவு செய்த நாள்
17
ஜூன்
2023
04:06
மதுராந்தகம்:மதுராந்தகத்தில் பிரசித்தி பெற்ற ஏரிகாத்த ராமர் எனும், கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில், வேறெங்கும் காண முடியாத வகையில், மூலவர் சன்னிதியில், ராமர், சீதையை கைப்பிடித்தவாறு, திருமணக்கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு. ஆன்மிக சிறப்புமிக்க தலமான இங்கு, அனைத்து சன்னிதிகளும் புனரமைக்கப்பட்டு, கடந்த 2006-ல் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின், போதிய பராமரிப்பின்மையால், கோவிலின் ராஜகோபுரம் மற்றும் தாயார் சன்னிதிகள் உள்ளிட்ட கோபுரங்களில், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. வர்ண பூச்சும் பொலிவின்றி உள்ளது. இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், 16 ஆண்டுகள் கழித்து, நன்கொடையாளர்கள் மூலம், 27 லட்சம் ரூபாய் மதிப்பில், அனைத்து சன்னிதிகள், கோவில் குளம் ஆகியவற்றை புனரமைத்து, மஹா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், கோவில் வளாகத்தில் பாலாலய சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கண்ணாடி அறையில் சுவாமி விக்கிரஹங்கள் வைக்கப்பட்டு உள்ளன. தற்போது, ராஜகோபுரத்தில் புனரமைப்பு பணி செய்ய, சவுக்கு மரங்கள் கொண்டு சாரம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.