பதிவு செய்த நாள்
19
ஜூன்
2023
05:06
ரஷ்யாவிலுள்ள விஞ்ஞானி ஒருவர் இந்த உலகில் கடவுள் இல்லை என்றும், தன்னாலும் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்ற முடியும் என்றும் அறிவித்தார். இயேசு நாதர் ஒரு விருந்தின்போது, தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியதுபோல, இவரும் மாற்றுவார் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். அவர் ஒரு பெரியஜாடியில் தண்ணீரை எடுத்து, அதில் சில ரசாயனப்பொருட்களைப் போட்டுக் கலக்கினார். அது சிவப்பு நிறமான திராட்சை ரசம் போல் மாறியது. இதை மக்கள் மத்தியில் காட்டிய விஞ்ஞானி, “இயேசுவும் ஒரு விஞ்ஞானிதான். அன்று கானாவூர் கல்யாண வீட்டில் யாருக்கும் தெரியாமல் தண்ணீருக்குள் ரசாயனப் பொருட்களைப் போட்டுவிட்டார். அதனால்தான் அந்த தண்ணீர் திராட்சை ரசமாக மாறியது,” என்று அறிவித்தார். அப்போது ஒரு சிறுவன் எழுந்தான். “ஐயா! நீங்கள் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிவிட்டீர்கள். அதை முதலில் நீங்கள் பருகுங்கள். பின்னர் எல்லோருக்கும் கொடுங்கள்!” என்றான். அப்போதுதான் விஞ்ஞானி விழிக்க ஆரம்பித்தார். “நான் உண்டாக்கிய திராட்சை ரசம் நிறத்திலும், மணத்திலும், ருசியிலும் நிஜமான திராட்சை ரசம் போல்தான் இருக்கும். ஆனால், அதைப் பருக முடியாது. ஏனெனில், அது விஷத்தன்மை உள்ளது,” என்றார். சிறுவன் அவரை விடவில்லை. “ஐயா! நீங்கள் உண்டாக்கிய ரசத்தை உங்களாலேயே பருக முடியவில்லை. விஷம் இருக்கிறது என்கிறீர்கள். ஆனால், இயேசு உண்டாக்கிய ரசத்தை அனைவரும் பருகிவிட்டு அது மிகுந்த ருசிகரமாக இருந்தது என்று புகழ்ந்தார்கள். இயேசுநாதர் தண்ணீரில் எந்த பொடியையும் போடவில்லை. அவர் ஜாடியின் அருகே வந்தபோது, தண்ணீருக்குள் ஒரு பூரிப்பு ஏற்பட்டது. வானாதி வானம் கொள்ளாத தனது சிருஷ்டிகர் தன் அருகே ஆறடி உருவ மனிதனாய், அன்பின் சொரூபியாய், நேச சிநேகிதனாய் நின்று கொண்டிருப்பதைக் கண்டபோது, தண்ணீருக்கே ஒரு மகிழ்ச்சி. அது பூரித்துப் பொங்கி, திராட்சை ரசமாக மாறிவிட்டது. கிறித்துவின் அன்பின் சாயல், தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றக் கூடியது,” என்றான். விஞ்ஞானியால் பதில் சொல்லமுடியவில்லை. ஆண்டவரின் சக்திக்கும், மனிதர்களின் செயற்கையான சக்திக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. ஆண்டவரே அனைத்தையும் செய்ய வல்லவர் என்பதை இந்த சம்பவம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.