பதிவு செய்த நாள்
24
ஜூன்
2023
03:06
தமிழர்களின் வாழ்வில் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஏதேனும் ஒரு வகையான இசையுடனே பிணைந்து உள்ளோம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, தமிழர்கள், பல்வேறு இசைக்கருவிகளை பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது நவீன மாற்றத்தாலும், பழமையை மறந்ததாலும், பழங்கால இசைக்கருவிகள் மறைந்து வருகிறது.
பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான இசைக்கருவியான ஐம்முகமுழவு இன்றும், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நாள்தோறும் இசைக்கப்பட்டு வருவது குறித்து எடுத்துரைக்கிறார் சென்னையில் உள்ள கோசை நகரான் தமிழர் தொல்லிசையகத்தை சேர்ந்த சிவக்குமார். பஞ்ச முகங்களை கொண்ட வாத்தியம், ஐம்முகமுழவு. இந்த வாத்தியம் திருவாரூரில் இன்றும் இசைக்கக்கூடிய 18 வாத்தியங்களில் ஒன்றாக உள்ளது. இந்த பழமையான வாத்தியம், திருவாரூர் கோவிலில் மட்டுமே இசைக்கப்படுகிறது. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நாள்தோறும் மாலை, 5:20 மணிக்கு, ஐம்முகமுழவு இசைக்கப்படுகிறது. இதன் சிறப்பு என்றால் ஐந்து முகங்களால் ஆக்கப்பட்டது. சிவனுக்கு ஐந்து முகங்கள் உள்ள தத்துவத்தை விளக்குகிறது. ஐந்து வகையாக தோல்களை பூட்டி, ஐந்து வகையாக முகங்களை கொண்ட ஒரே இசைக்கருவி இதுதான். இன்றைய தலைமுறையினர் பலரும், ட்ரம்ஸ் எனப்படும் நெகிழியால் செய்யப்பட்ட இசைக்கருவிகளுக்கு தள்ளப்படுகிறார்கள். பெற்றோர்களும் அந்த இசைக்கருவியைத்தான் கற்று கொடுக்கிறார்கள். மேற்கத்திய இசைக்கருவிகள் தான் அதிகமான ட்ரம்ஸ்களை கொண்டுள்ளது என மார்தட்டிக்கொள்கிறார்கள். ஆனால், 3,000 ஆண்டுகளுக்கு முன்பே, ஐந்து முகங்களை கொண்ட இசைக்கருவிகளை தமிழர்கள் இசைத்திருக்கிறார்கள் என்பதற்கு சான்று, இந்த ஐம்முகமுழவு.