பண்டைய கால தானம் வழங்கியதற்கான சூலக்கல் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2023 04:06
திருப்பாசேத்தி: திருப்பாச்சேத்தியில் 2வது முறையாக தானம் வழங்கியதற்கான சூலக்கல் கண்டெடுக்கப்பட்டள்ளது. தமிழகத்தில் கோயில்களில் மூன்று கால பூஜை உள்ளிட்டவைகள் நடைபெற நிலங்கள் உள்ளிட்டவைகள் தானமாக வழங்குவது மன்னர்கள் வழக்கம். தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் குறித்து கல்வெட்டுகளில் பொறித்து வைப்பார்கள். சிவன், காளி, அய்யனார் கோயில்களுக்கு தேவதானம் என்ற பெயரில் "சூலாயுதம்" வடிவமைத்தும் ,பெருமாள் கோயில்களுக்கு திருவிளையாட்டம் என்ற பெயரில் " சக்கரமும் " கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். திருப்பாச்சேத்தி அரசு பள்ளி அருகே கிழக்கு நோக்கிய நிலையில் ஒன்றரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட பட்டிய கல்லில் புடைப்புசிற்பமாக சூலக்கல் கடந்த 6ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அதே போன்ற சூலக்கல் 200 மீட்டர் தொலைவில் சுண்ணாம்பு காளவாசல் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. புடைப்புச் சிற்பமாக சூலாயுதம் செதுக்கப்பட்டுள்ள இந்த சூலக்கல்லும் கிழக்கு நோக்கிய நிலையிலேயே உள்ளது. இப்பகுதி மக்கள் இதனை காளீஸ்வரர் என வழிபடுகின்றனர். சோனைமுத்து கூறுகையில்: திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலி உடனாய திருநோக்கிய அழகிய நாதர் சிவாலயம் அமைந்துள்ளது. பச்சை மரகத லிங்கமும் இக்கோயிலில் உண்டு, திருப்பாச்சேத்தி ரயில் நிலையம் அருகில் 10 ஏக்கரில் சிவாலயம் இருந்துள்ளது. பாண்டிய மன்னர்களால் அமைக்கப்பட்ட இந்த சிவாலய பராமரிப்பிற்கும், பூஜைக்கும் உதவ நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.அது சம்பந்தமான சூலக்கல் இது. ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட சூலக்கல்லிற்கும் இதற்கும் இடையில் சுமார் 200 மீட்டர் தொலைவு இருக்கும். எனவே கோயிலுக்கு நிலம் வழங்கியதை குறிக்கும் சூலக்கல் , மேலும் சூலாயுதத்தை சிவனாக வழிபடுவது கிடையாது, ஆனால் இங்கு இதனை சிவனாக வழிபடுகின்றனர், என்றார்.