கீழடி: கீழடி அருகே கொந்தகையில் ஸ்ரீ கைக்காயிரமுடைய அய்யனார் கோயிலில் மழை வேண்டி 3 நாள் களரி விழா நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. கொந்தகை கிராமத்தில் ஸ்ரீகைக்காயிரமுடைய அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடம்தோறும் மூன்று நாட்கள் மழை வேண்டி களரி திருவிழா நடைபெறவது வழக்கம். இதற்காக திருமணமாகி வெளியூர் சென்ற பெண்கள் விரதமிருந்து பிறந்த ஊருக்கு வந்து வேளார் தெருவில் பொங்கல் விழாவிற்காக செய்யப்பட்ட புத்தம் புது மண்பானைக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாலை அணிவித்து ஊர்வலமாக கொண்டு சென்று நள்ளிரவில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். முதல் நாளான நேற்று முன்தினம் மாலை பாரம்பரிய முறைப்படி பசுமாட்டில் இருந்து நேரடியாக கறந்த பாலைக் கொண்டு பால் குட ஊர்வலம் மற்றும் கரகம் மேள தாளங்கள் முழங்க புறப்பட்டு சாமியாடிகள் சாமியாடியவாறு கிராம தெருக்கள் ஸ்ரீகைக்காயிரம் உடைய அய்யனார் கோவில் வந்தடைந்தனர். அதன்பின் திருமணம் ஆகி வேறு பகுதிகளுக்கு சென்ற பெண்கள் வேளாளர் தெருவில் இருந்து பட்டாசு வெடித்து மேள தாளங்கள் முழங்க இரவில் அலங்கரிக்கப்பட்ட மண் பானைகளை தலையில் சுமந்து கோயில் நோக்கி ஊர்வளமாக சென்றனர். நள்ளிரவில் ஸ்ரீ கைக்காயிரம் உடைய அய்யனாருக்கு பால் அபிஷேகம் நடத்தப்பட்டு அதிகாலைப்பொழுதில் பெண்கள் கொண்டு வந்த மண்பானைகளில் பொங்கல் வைத்து அய்யனாருக்கு படைத்தபின் பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. திருமணமாகி வெளியூர் சென்ற பெண்கள் பிறந்த ஊர் வந்து அய்யனாருக்கு பொங்கல் வைத்து வழிபட்டால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை.விழாவில் கொந்தகை மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் பங்கேற்று அய்யனாரை தரிசனம் செய்தனர்.