ராஜபாளையம்: ராஜபாளையம் அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.
ராஜபாளையம் மதுரை ரோட்டில் பழமை வாய்ந்த மாயூரநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் தேரோட்டத்துடன் கூடிய 10 நாள் திருவிழா நடைபெறும். இதை முன்னிட்டு நேற்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. சுவாமி, அம்மன், உற்சவர் சிலைகளுக்கு சிவ மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் பூர்ணாஹுதிக்கு பின் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. நந்தி கொடி மரம் பலி பீடத்திற்கு பால், சந்தனம், தேன் வாசனை திரவியங்கள், புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகங்களை தொடர்ந்து கொடிமரம் மற்றும் உற்சவருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தினமும் காலை சிறப்பு அலங்காரமும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சிறப்பு நிகழ்ச்சியாக ஜூன் 30ல் திருக்கல்யாணம், ஜூலை 2ல் தேரோட்டமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜா தலைமையில் கோயில் அலுவலர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.