பதிவு செய்த நாள்
24
ஜூன்
2023
10:06
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியான லிங்கத்தில் 24வது ஆண்டு பிரதிஷ்டை தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கமானது, கடந்த 1999ம் ஆண்டு, ஜூன் 24ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏழு சக்கரங்களும் உச்சநிலையில் சக்தியூட்டப்பட்டுள்ள இந்த லிங்கம் எந்த ஒரு மதத்தையும் சாராமல், ஒரு மனிதர் தனது உயிர் தன்மையை உணர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பாதரசத்தைக் கொண்டு ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில், இதுதான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம். இந்நிலையில், தியானலிங்கத்தில் 24வது ஆண்டு பிரதிஷ்டை தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தியானலிங்க கருவறையில் காலை, 6:00 மணிக்கு, ஈஷா பிரம்மச்சாரிகளின் அம் நமசிவாய மந்திர உச்சாடன யுடன் பிரதிஷ்டை தின நிகழ்வு துவங்கியது. காலை, 8:20 மணிக்கு, ஈஷா ஆசிரமவாசிகள், சூபி பாடல்களை பாடிய அர்ப்பணித்தனர். சிறப்பு விருந்தினர்கள் தேவாரம் பாடினர். பௌத்த மதங்களின் மந்திர உச்சாடனை நடந்தது. தொடர்ந்து, சிதம்பரம் கோவில் தீக்ஷிதர்கள், ருத்ரம் சமகம் அர்ப்பணித்தனர். அதேபோல, இசைக்கருவிகளை கொண்டு நடத்தப்படும் நாத ஆராதனா நிகழ்வும், குருபானி, வச்சனா, கிறிஸ்துவ பாடல்கள், இஸ்லாமிய பாடல்கள், சமஸ்கிருத உச்சாடனங்கள் போன்றவை இசை அர்ப்பணிப்புகளாக செய்யப்பட்டன. அதோடு, ஆதிசங்கரர் இயற்றிய நிர்வாண ஷடாகம் எனும் சக்தி வாய்ந்த மந்திரங்களின் உச்சாடனம் நடைபெற்றது. மாலை, ஈஷாவில் உள்ள பிரம்மச்சாரிகள், குருபூஜை செய்து வழிபட்டனர். தியானலிங்க பிரதிஷ்டை தினத்தை ஒட்டி, பல்வேறு மதங்களை சேர்ந்த மக்களும், ஈஷாவுக்கு வந்து நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.