பதிவு செய்த நாள்
26
ஜூன்
2023
12:06
காத்மாண்டு: நேபாளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் கோவிலில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க, ஊழல் தடுப்பு குழுவினர் வந்ததை அடுத்து, கோவில் நடை நேற்று மூடப்பட்டது. இதனால், அங்கு வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தில் உள்ள காத்மாண்டுவில், ஹிந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான பசுபதிநாதர் கோவில் உள்ளது. இங்கு கடந்த சிவராத்திரி விழாவின் போது, கோவிலில் உள்ள சிவலிங்கத்தை சுற்றி, 103 கிலோ எடையுள்ள ஜல்ஹாரி என்னும் தங்க ஆபரணம் நிறுவப்பட்டது. இதில், 10 கிலோ தங்கம் மாயமானதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, அந்நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவின் உச்ச அமைப்பு, பசுபதிநாதர் கோவிலில் நேற்று விசாரணை நடத்தியது. அப்போது, பாதுகாப்புப் படையினர் உட்பட ஏராளமானோர் குவிக்கப்பட்ட நிலையில், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து சிவனை தரிசிக்க வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய ஊழல் தடுப்பு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தங்க ஆபரணத்தை விசாரணைக்காக தங்களுடன் எடுத்துச் சென்றனர் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.