பராமரிப்பின்றி வீணாகி வரும் வீற்றிருந்த பெருமாள் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2023 12:06
மேலுார்: பனங்காடியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வீற்றிருந்த பெருமாள் கோயில், பராமரிப்பில்லாமல் வீணாகி வருவதால் பக்தர்கள் கவலைப்படுகின்றனர்.
மேலுார் அருகே பனங்காடியில் 12ம் நுாற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர்களால் வீற்றிருந்த பெருமாள் கோயில் பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் கட்டப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கோயிலின் சுவர்கள் முழுவதும் பிராமிய மற்றும் வட்டெழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள் உள்ளது. இக்கோயிலின் வரலாறு மற்றும் 172 ஏக்கர் நிலங்கள் குறித்து கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயில் முதன்மை திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. போதிய வருவாய் இல்லாமல் கோயில் சிதிலமடைய ஆரம்பித்துள்ளது. டிரஸ்டி பெருமாள் கூறியதாவது: கும்பாபிஷேகம் முடிந்து 300 ஆண்டுகளுக்கு மேலாகிறது. கோயில் கோபுரத்தை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து அறநிலையத்துறையினர் உதவி செய்ய வேண்டும். தனி அர்ச்சகருக்கு உரிய சம்பளம் கொடுக்க முடியவில்லை. ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது, என்றார். ஊராட்சி தலைவர் சுப்புராமன் கூறியதாவது: பூஜாரி குறிப்பிட்ட நாட்களில் வந்து செல்வதால், மற்றநாட்களில் சாமி கும்பிட வரும் பக்தர்கள் திரும்பிச் செல்கின்றனர். அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் டிரஸ்டிகள் கோயில் நிலங்களை மீட்டு வருவாயை அதிகரிக்க வேண்டும். பொதுமக்கள் பங்களிப்போடு கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். பூஜாரியை வைத்து கோயிலில் மூன்று கால பூஜைகள் நடத்தி பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.