பதிவு செய்த நாள்
03
அக்
2012
10:10
ராமேஸ்வரம்: கஷ்டப்படும் போது கோவிந்தா நாமம் தான் காக்கும் என திருச்சி கல்யாணராமன் கூறினார். ராமேஸ்வரம் சிருங்கேரி மடத்தில் நடந்து வரும் வில்லிபாரத தொடர் சொற்பொழிவில், "திரவுபதியின் மானம் காத்தல் என்ற தலைப்பில் நேற்று இவர் பேசியதாவது:தர்மபுத்திரன், நாரதர் பேச்சை கேட்டு ராஜசூய யாகம் செய்தார். துரியோதனன், நயவஞ்சகமாக சகுனியுடன் சேர்ந்து, தர்மனை சூதாட அழைத்தான். சூதாட, தர்மபுத்திரர் பாண்டவர்களோடு வந்தார். மது அருந்துதல், சூதாடுதல், விலை மாதர்களுடன் இருத்தல் ஆகிய, மூன்று கொடிய பழக்கம் யாரிடத்தில் இருக்கிறதோ அங்கு, மகாலட்சுமி தங்கமாட்டாள் என்பது வள்ளுவர் வாக்கு. தர்மர், சூதாட்டத்தில் அனைத்து செல்வங்களையும், தன்னையும், தம்பிகளையும், மனைவி திரவுபதியையும் இழந்தார். சபைக்கு திரவுபதியை இழுத்து வந்து, துரியோதனன் அவமானபடுத்தினான். "அடிமைகள் மேலாடை அணியக்கூடாது, என கூறி, திரவுபதியின் புடவையை, சபையில் பலர் காண, துச்சாதனன் பிடித்து இழுத்தான். யாராலும் காப்பாற்ற முடியாத நிலையில் கிருஷ்ணனை, ஆயிரம் நாமங்கள் சொல்லி அழைத்தாள். அதில், கோவிந்தா... கோவிந்தா... என்று கதறியவுடன், வண்ண பொற்சேலைகள் வளர்ந்து, திரவுபதி காக்கப்பட்டாள். 100 ஜென்மங்களில் நாம் செய்த பாவம், "கோவிந்தா... கோவிந்தா என கூறினால் சிதைந்து போய்விடும். கோடீஸ்வரன் மகளாக பிறந்து, ஐந்து கோடீஸ்வரன்களை மாலையிட்டவள், சபையில் அவமானப்படும்போது, கோவிந்தன் தான் காப்பாற்றினார். நாமும் ஐந்து இந்திரியனை, மாலையிட்டு இருக்கிறோம். கஷ்டப்படும்போது கோவிந்தா நாமம் தான் காக்கும், என்றார்.