திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அம்மன் கோவிலில் புகுந்து, தங்கத்தாலி திருடி சென்ற மர்ம ஆசாமிகளை, போலீஸார் தேடி வருகின்றனர். கலசப்பாக்கம் அருகே முத்தரசம்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி வெள்ளி மற்றும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கம். பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து குலதெய்வமாக வழிபடுகின்றனர்.நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியை சேர்ந்த பூசாரி கிருஷ்ணன், 42 என்பவர் கோயிலை பூட்டிவிட்டு சென்றார். வழக்கம்போல் கோவிலுக்கு வந்த போது, கோயிலின் முன்பக்க கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.கோயிலிற்குள் சென்று பார்த்தபோது அம்மன் கழுத்திலிருந்த தங்கத்தாலி பீரோவில் வைத்திருந்த வெள்ளி கொலுசு, அம்மனுக்கு அணியும் கவரிங் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. கலசப்பாக்கம் போலீஸார் விசாரிக்கின்றனர்.