பதிவு செய்த நாள்
01
ஜூலை
2023
11:07
அவிநாசி: நொய்யல் பாதுகாப்பு விழிப்புணர்வு குழு,அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் கொங்கு மண்டல மக்கள் சார்பில் நொய்யல் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை விழா நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி கோவை, திருப்பூர்,ஈரோடு மற்றும் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய பணிக்களுக்கான நீர் தேவைகளை வழங்குவதில் நொய்யல் நதி இன்றியமையாததாக விளங்குகிறது.சுமார் 180 கி.மீட்டர் பாய்ந்து ஓடி வரும் நொய்யல் நதி கிட்டதட்ட 5000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க,நொய்யல் நதியை பாதுகாத்திட ஊர்வலமாக வந்த விழிப்புணர்வு ரத யாத்திரையை ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் மேளதாளம் இசைத்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில்,திருவிளக்கு ஏற்றி நொய்யல் ரத யாத்திரை விழாவை ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்தானந்தா துவக்கி வைத்தார்.ஸ்ரீ ராமகிருஷ்ணா அறக்கட்டளையின் தலைவர் அவிநாசிலிங்கம் வரவேற்புரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சிக்கான அறிமுக உரையை நொய்யல் பாதுகாப்பு விழிப்புணர்வு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாரதி வாசித்தார். மேலும் திருப்பூர் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் சாமிநாதன், சத்யசாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் ராஜேஷ்வரன், நொய்யல் பெருவிழாவின் செயலாளர் சரவணன், வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விட்டல்ராஜ்,இந்திய தேசிய விவசாயிகள் நலச்சங்கம் மணி,மூர்த்தி தம்புரான், சுந்தர்ராஜ் அடிகளார் மற்றும் துறவிகள் கலந்து கொண்டனர். விழாவில் மாணவிகளின் நாட்டியம் மற்றும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.