பதிவு செய்த நாள்
03
ஜூலை
2023
10:07
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, சொக்கநாதர் சன்னதியில் இருந்து பெண்கள் சிலர் பழங்கள், குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய சரடு, வளையல், சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, ரிப்பன், இனிப்பு, பூ, வெற்றிலை பாக்கு, சீவல், ஜாக்கெட் போன்ற சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் மூங்கில் கூடையில் வைத்து ஊர்வலமாக புறப்பட்டு, நடராஜர் மண்படம் அருகே திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைச் சென்றடைந்தனர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் முழங்க மாப்பிள்ளை அழைப்பு உள்பட சம்பிரதாய சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க பெருவுடையாரிடம் இருந்து திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார் எடுத்து பெரியநாயகி அம்மனுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பெருவுடையார் - பெரியநாயகி அம்மன் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த திருக்கல்யாணத்தில் பங்கேற்றால் திருமண பாக்கியம், தம்பதியர் ஒற்றுமை, குழந்தை பாக்கியம், மாங்கல்ய பலம் ஆகியவை நடைபெறும் என்பது பக்தர்களின் ஐதீகம். இதனால், இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.