தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் உள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் ஆனித் திருவிழா கடந்த ஜூன் 24 கொடியேற்றம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சொர்ணமூர்த்தீஸ்வரர், பெரியநாயகி உட்பட பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து இரவு சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஐந்தாம் நாள் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. எட்டாம் நாள் பாரிவேட்டை யும் நடந்தது. புதிய தேர் வெள்ளோட்டம் விடப்படாததால் ஒன்பதாம் திருநாளான நேற்று மாலை தேரோட்டத்திற்கு பதிலாக சொர்ணமூர்த்தீஸ்வரர், பெரியநாயகி அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் பவனி வந்தனர். திருவிழாவில் நான்கு நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். எஸ்.பி. செல்வராஜ் கோவிலிலேயே முகாமிட்டு நேரடி மேற்பார்வையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இன்று பத்தாம் திருநாள் தீர்த்தவாரி , ரிஷப வாகனத்தில் சுவாமி உலாவும், நாளை கொடியிறக்கமும் நடைபெறுகிறது.