வியாச பகவான்- இந்த பூவுலகுக்குக் கிடைத்த மாபெரும் வரம், பொக்கிஷம், உபகாரம், ஆசீர்வாதம்... இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு மகிமைகள் உண்டு இந்த வேத முனிவருக்கு. தேவர்கள், மனிதர்கள் என எல்லோருக்கும் அவசியமான வேதங்களைப் பிரித்து தொகுத்தளித்த புண்ணிய புருஷர் அவர். வேத சாரங்களை இன்னும் எளிதாக நமக்குப் புரியவைக்க 18 புராணங்களைப் படைத்தார். மகாபாரதம் எனும் காலத்தால் அழியாத காவியத்தை அளித்தார். அதுமட்டுமா? வேதாந்த சித்தாந்த கண்ணாடியாக திகழும் பிரம்ம சூத்திரத்தை தந்தவரும் வியாசர்தான். இதற்கு த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத ஆச்சார்யர்கள் பாஷ்யம் (பொழிப்புரை) அருளியிருக்கிறார்கள்.
இவ்வளவு மகத்துவங்களுக்கும் சொந்தகாரரான வியாச பகவானுக்கு, மூன்று மத ஆச்சார்யர்கள் செய்யும் பூஜையே வியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரதமாகும். அற்புதமான இந்த விரதத்தை நான்கு மாதங்கள் செய்ய வேண்டும். ஆனாலும்.... ஒரு பக்ஷத்தை ஒரு மாதமாகக் கணக்கில் கொண்டு, நான்கு பக்ஷங்களாக அதாவது இரண்டு மாதங்கள் விரதம் அனுஷ்டிப்பது வழக்கமாகிவிட்டது.
மழைக்காலத்தில் யதிகள் பாத யாத்திரையாகப் போகும்போது, பல சிறு சிறு பூச்சி வகைகள் மிதிபட நேரிடும் என்று அஞ்சி, இதைத் தவிர்க்க குறிப்பிட்ட அந்தக் காலத்தில் ஒரே இடத்தில் இருந்து சாதுர்மாஸ்யம் மேற்கொள்வார்கள். அந்த தருணத்தில் சிஷ்யர்களும் பக்தர்களும் குருமார்களுக்கு சிஷுருøக்ஷ செய்வார்கள். இந்த புண்ணிய காலத்தில்... வேதாந்த கிரந்தங்கள், சாஸ்திர வாக்யாத்தங்கள் என யதிகள்(சாதுக்கள்) தாம் தங்கியிருக்கும் இடத்தையே புனிதமாக்குவார்கள். இது வேத வியாசருக்கு மிக உகந்ததும் விசேஷமானதும் ஆகும். ஆனி மாதம் பவுர்ணமி அன்று ஆரம்பமாகும் இந்த விரதம். ஆக, ஆனி பவுர்ணமியை வியாச பவுர்ணமி, குரு பூர்ணிமா எனப் போற்றுவர். சன்னியாசி ஒருவரின் வயது அவர் செய்த வியாச பூஜையின் எண்ணிகையைக் கொண்டே கணக்கிடப்படும்.