சிவபக்தையான கர்ப்பிணி ஒருத்தி ஐந்தெழுத்தான ‘நமச்சிவாய’ மந்திரத்தை ஜபித்தபடி நடந்து சென்றாள். வெயிலின் கடுமையால் மயங்கிய அவளுக்கு உதவ எண்ணி, அருகில் இருந்த தென்னை மரத்தில் இளநீர் குலை தோன்றச் செய்தார் சிவபெருமான். அவரே வழிபோக்கராகவும் வந்து இளநீரை பறித்துக் கொடுத்தார். தாகம் தீர்ந்த அவள் வணங்கிய போது சிவலிங்கமாக காட்சியளித்தார். இந்த தலம் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள கபிஸ்தலமாகும். சுவாமியின் திருநாமம் அழகு சடைமுடி நாதர். இளநீர் தந்த பெருமான் என்பதால் ‘குலை வணங்கீசர்’ எனப்படுகிறார். இங்கு வாழ்ந்த சிட்டுக்குருவி ஒன்று சிவனருளால் முக்தி பெற்றதால் இவருக்கு ‘சிட்டு லிங்கம்’ என்றும் பெயருண்டு. தென்னை மரமே இங்கு தலவிருட்சம்.