ஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா வரும் 14ல் கொடியேற்றம்: ஜூலை 22ல் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2023 11:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் ஜூலை 22-ல் நடக்கிறது. ஜூலை 14ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
108 வைணவ தலங்களில் ஒன்றானதும், தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை கொண்டதுமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு தென் மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டும் ஜூலை 14 காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. ஜூலை 18 காலை 10:00 மணிக்கு ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு 10:00 மணிக்கு கோயிலில் ஐந்து கருட சேவையும், ஜூலை 20 இரவு 7:00 மணிக்கு மேல் கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் சயன சேவையும் நடக்கிறது. ஆடிப்பூர பந்தலில் தினமும் மதியம் 2:00 மணிக்கு மேல் இரவு 10:00 மணி வரை பல்வேறு ஆன்மீக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்ட திருவிழா, ஜூலை 22 காலை 8:05 மணிக்கு துவங்குகிறது. இதனை முன்னிட்டு விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.