பதிவு செய்த நாள்
06
ஜூலை
2023
04:07
பல்லடம்; பல்லடம் அருகே, முத்துக்குமார் சுவாமி கோவிலில், மாலான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
பல்லடம் அடுத்த, மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில் திருப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, பாலாலய கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. செயல் அலுவலர் ராமசாமி தலைமை வகித்தார். தக்கார் கார்த்திகை செல்வி முன்னிலை வகித்தார். முன்னதாக, நேற்று முன்தினம் மாலை, 4.00 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், புனித நீர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மற்றும் அனுமதி பெறுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. தொடர்ந்து, கோபுர கலசங்களின் சக்திகளை திருக்குடத்தில் எழுந்தருள செய்தல், வேள்வி சாலையில் திருக்குடங்களை நிறுவுதல், மூலவர் முத்துக்குமாரசாமி, மற்றும் பரிவார தெய்வங்களுக்கு முதல் கால வேள்வி ஆகியவை நடந்தன. நேற்று, இரண்டாம் கால வேள்வி, 108 திரவியாகுதி, பேரொளி வழிபாடு உள்ளிட்டவை நடந்தன. காலை 7.25க்கு அருள் சக்திகளை பிம்பத்தில் எழுந்தருள செய்தல் நிகழ்வைத் தொடர்ந்து, திருப்பணி துவக்க விழா நடந்தது. பேரூர் ஆதீனம் மற்றும் சிறவை ஆதீன தொண்டர்கள் வேள்விப் பணிகளை மேற்கொண்டனர். சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசாமி அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.