பணம்....எல்லார் வாயிலும் தினமும் பத்து தடவையாவது வந்து போகும் சொல். சொல்லாவிட்டாலும் எல்லார் கையிலும் புழங்கும் பொருள். இதை ‘வேண்டாம்’ என்று சொல்பவர்களை விரல்விட்டுக் கூட எண்ண முடியாது. உலக வாழ்க்கையை வெறுத்தவனுக்குக் கூட பசிக்காமல் இருப்பதில்லை. அப்போது அவன் மடியில் கட்டியிருக்கும் பணத்தை அவிழ்த்துப் பார்த்து விடுகிறான்.பணம் அத்தியாவசிய தேவைகளுக்குப் பயன்பட்ட காலம் வரை, உலகம் நன்றாகத்தான் இருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எளிமையாக வாழ்ந்தார்கள். தமது பெயரை நிலைநாட்ட மாளிகை எதையும் அவர்கள் எழுப்பவில்லை. வீடுகட்டிக் கொண்டிருந்த தோழர்களைப் பார்த்து,“இதை விட அவசரமான காரியங்கள் எத்தனையோ நமக்கு இருக்கின்றன,” என்றார்கள்.புலைல் என்ற அறிஞர் சொல்வதைக் கேளுங்கள்.என் எதிரில் அலங்கார ரூபியான ஒரு பெண்வந்தாள். அவளது அழகில் மயங்கிய சிலர் தடுமாறி விழுந்து கையை இழந்தனர். சிலர் கண்ணை இழந்தனர், சிலர் உயிரையே இழந்தனர். இந்தப் பாதையை விட்டு நகர்ந்தால் மனிதசமுதாயம் உயர்ந்து விடும். அவளிடம் அகப்பட்டுக் கொண்ட ஒருவன்,“உன்னை நான் வெறுக்கிறேன். இறைவன் என்னை உன்னிடமிருந்து காப்பாற்றுவானாக,” என்று கத்தினான்.அவள் சிரித்துக்கொண்டே, ‘அவன் எங்கே உன்னைக் காப்பாற்றப் போகிறான்? எனக்கு நிச்சயமாகத் தெரியும்- உன் வேண்டுகோளை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று. என்னுடைய தீமையிலிருந்து தப்ப விரும்பினால், முதலில் பணத்தை வெறுக்க வேண்டும். அதற்குப் பிறகு தான் எல்லாம்’.அந்த மனிதனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘இப்படியெல்லாம் பேசும் நீ யார்?’ என்று கேட்டான். ‘என்னைத் தெரியாதா உனக்கு? நான் தான் உலகம்’ என்று கூறிய அவள் கணீரென்று சிரித்தாள்.