டெங்கு, சிக்குன் குனியா என்று உயிரையே பறிக்கும் காய்ச்சல் பலவகைகளில் நாட்டை அலைக்கழிக்கிறது. சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இல்லை. இதனால் மழை பொய்த்து உலகம் வெப்பமயமாகி விட்டது. இதயத்தையே மாற்றும் அளவுக்கு மருத்துவம் வளர்ந்திருந்தாலும், திடீரென வரும் ஒரு காய்ச்சல் பல உயிர்களைப் பறித்து விடுகிறது. இந்நிலையில் ‘நம்மை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்’ என்ற நிலை வந்து விட்டது. இந்நிலையில், தீராத காய்ச்சலையும் தீர்த்து வைக்கும் ஜுரஹரேஸ்வரரை காஞ்சிபுரம் சென்று தரிசித்து வரலாம்.
தல வரலாறு: தாரகன் என்ற அசுரன், சிவனுடைய சக்தியால் மட்டுமே தனக்கு அழிவு வர வேண்டும் என்ற வரம் பெற்றிருந்தான். இதன் காரணமாக தேவர்களைத் துன்புறுத்தினான். வருத்தமடைந்த தேவர்கள், சிவனிடம் முறையிட்டனர். அவர்களிடம் ‘கவலை வேண்டாம்’ என சிவன் சொல்லிவிட்டாலும் காலதாமதமாகிக் கொண்டே வந்தது. இந்நிலையில், சிவன் திடீரென தவத்தில் ஆழ்ந்து விட்டார். அவரை மன்மதன் மூலமாக எழுப்பும் முயற்சியில் மன்மதன் இறந்தானே தவிரபலன் கிடைக்க வில்லை. எனவே, தேவர்கள் சிவனைப் பல ஸ்தோத்திரங்கள் சொல்லி துதித்தனர். இதையடுத்து சிவனின் கருணைப் பார்வை கிடைத்தது. அவர் தன் நெற்றிக்கண்ணில் இருந்து சுடரை வெளிப்படுத்தி அதை அக்னியிடம் கொடுத்தார். அக்னியின் வயிற்றை அந்த நெருப்பு தாக்கியது. அப்போது, எல்லா தேவர்களுமே அதன் உக்கிரத்தை உணர்ந்தனர். கடும் காய்ச்சல் போல உ<டல் நெருப்பாய் சுட்டது. தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக தேவர்கள் மேலும் துடித்தனர். சிவனையே அவர்கள் சரணடைந்தனர். அவர்களிடம் சிவன், “பூலோகத்தில் காஞ்சி என்னும் திருத்தலத்தில் சுரன் என்ற அரக்கனை ஒழித்துவிட்டு லிங்கவடிவில் எழுந்தருளியுள்ளேன். அதை ‘ஜுரஹரேஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள். நீங்கள் அந்த லிங்கத்தை வழிபட்டால் உஷ்ணம் தணியும் என்றார். தேவர்களும் இங்கு வந்து வழிபட்டு, சுரஹரேஸ்வர தீர்த்தத்தில் நீராடி உடல் குளிர்ந்தனர்.
சிறப்பம்சம்: இந்த கோயிலில் ஸ்ரீரங்கத்தைப் போல தோற்றமுடைய பிரணவாகார விமானம் உள்ளது. இந்த அபூர்வ விமானத்தின் நான்குபுறமும் ஜன்னல்கள் உள்ளன. காய்ச்சல் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடும் போது, இந்த ஜன்னல்களின் வழியே வரும் காற்று, வெளிச்சம் ஆகியவை நோயைக் குணமாக்குவதாக தகவல் இருக்கிறது. மூலஸ்தானத்திலும் கருங்கல் ஜன்னல் உள்ளது குறிப்பிடத்தக்கது. பழமையான கோயில் என்பதால், தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.
திறக்கும் நேரம்: காலை 8-11, மாலை 5-இரவு 7. இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து மேற்கே ஒரு கி.மீ.,