நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர திருவிழா துவங்கியது: 15ல் அம்மனுக்கு வளைகாப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2023 10:07
திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூரத் திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவிற்காக காந்திமதி அம்பாள் சுவாமி சன்னதியில் இருந்து வெள்ளி சப்பரத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை காந்திமதி அம்பாள் கோவிலுக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் அதிகாலை காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பால் தயிர் மஞ்சள் இளநீர் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதன் தொடர்ந்து மகா தீபாரத்தனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காந்திமதி அம்பாள் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி திருவிழாவின் 10 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான வளைகாப்பு உற்சவம் வரும் 15ம் தேதியும், முலைகட்டும் உற்சவம் வரும் 21ம் தேதியும் நடைபெறுகிறது.