அருப்புக்கோட்டை அருகே சோழர்களின் குலதெய்வம் நிசம்பசூதனி சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2023 11:07
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சோழர்களின் குலதெய்வம் நிசம்பசூதனி சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., வரலாற்று துறை பேராசிரியர்கள் விஜயராகவன், ராஜபாண்டி ஆகியோர் ரெட்டியபட்டி அருகே உள்ள மறவர் பெருங்குடியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அவ் ஊரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் கண்மாயில் அரிய வகை சிற்பங்கள் உள்ளதாக தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் கன்மாய்க்கு சென்று ஆய்வு செய்தபோது அங்கு 3 அடி உயரம் உள்ள சிலை ஒன்று 3 பாகங்களாக உடைந்த நிலையில் கிடந்தது. உடைந்த சிலையினை பேராசிரியர்கள் சுத்தம் செய்து பாகங்களை பொருத்தி ஆய்வு செய்தனர். சிலை குறித்து பேராசிரியர்கள் கூறியதாவது : இங்கு கிடைத்துள்ள சிலையானது பல பாகங்களாக உடைந்த நிலையில் உள்ளன. உடைந்த சிலையின் இரண்டு பாகங்கள் மட்டுமே தற்பொழுது கண்மாயின் மேற்புறத்தில் காணப்படுகிறது. சிலையில் எஞ்சிய பாகமானது நீரில் மூழ்கி உள்ளதாக கூறப்படுகிறது. 3 அடி உயரத்தில் நான்கு கைகளுடன் கேடயம், கபாலம் தாங்கியவாறு, இடது கால் தரையில் விழுந்துள்ள உருவத்தின் தலையில் அழுத்தியவாறு உள்ளது. சிற்பம் சோழர்களின் குலதெய்வமான நிசம்பசூதனி ஆகும். பிற்கால சோழர்களின் ஆட்சியின் போது சோழர்கள் போருக்கு செல்ல நேர்ந்தால் நிசம்பசூதனி சிலையினை வழிபட்டு செல்வது வழக்கம். சிலையை வழிபட்டு போருக்குச் சென்றால் வெற்றிவாகை சூட இயலும் என்ற நம்பிக்கை சோழ மன்னர்கள் மற்றும் படை வீரர்களிடையே திகழ்ந்துள்ளது. சோழர்களின் குலதெய்வமான இந்த சிற்பம் பாண்டியர்களின் ஆட்சி பகுதியில் காணப்படுவது அரிதான ஒன்று. பிற்கால சோழர்களின் ஆட்சி காலத்தில் பாண்டியர்கள் வலுவிழந்து காணப்பட்டனர். அப்போது பாண்டிய நாடு முழுவதும் சோழர்களின் கட்டுப்பாட்டில் சென்றது. அப்போது இந்த சிலையினை வடிவமைத்து வழிபட்டு இருக்கலாம் என்றனர்.