பதிவு செய்த நாள்
18
ஜூலை
2023
04:07
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், தட்சணாயன புண்ணிய காலம் துவங்கியது.
ஒரு ஆண்டில் ஆறு மாதங்கள் உத்திராயணம், ஆறு மாதங்கள் தட்சணாயனம். அதாவது தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்திராயணம் எனவும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சணாயனம் எனவும் உள்ளது. ஆடி 1ம் தேதி, தட்சணாயன புண்ணிய காலம் எனும் வைபவம் அனைத்து கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். காரமடை அரங்கநாதர் கோவிலில், தட்சணாயனம் புண்ணிய கால வைபவம் நேற்று துவங்கியது. அதிகாலை சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, விஸ்வரூப தரிசனம், கோ தரிசனமும் நடந்தது. அதை தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய திரவியங்கள், கலச தீர்த்தத்துடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின், ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் அரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, காலை சந்தி பூஜை, சாற்று முறை சேவிக்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் என, ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.