பதிவு செய்த நாள்
19
ஜூலை
2023
06:07
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவில், தேர் ஷெட் அமைக்கும் பணி, நான்கு ஆண்டு இழுபறிக்குப்பின் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள, 5 தேர்களை பாதுகாப்பாக நிறுத்த, கோவில் மைதானத்தில், கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தேர் ஷெட் அமைக்கும் பணி, கடந்த 2019ம் ஆண்டு துவங்கப்பட்டது. 40 அடி அகலம், 60 அடி உயரத்தில், இரும்பு தூண்கள் மூலம் தேர் ஷெட் அமைக்கப்பட்டது. இந்த ஷெட்டிற்கு, மேற்கூரையும் போடப்பட்டது. அதன்பின், கொரோனா ஊரடங்கு காரணமாக, பணிகள் நிறுத்தப்பட்டது. அதன்பின், ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து, பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. தேர் ஷெட்டின் நான்கு புறங்களிலும் திறந்தவெளியாக இருந்ததால், காற்று, மழை, வெயிலிலும், தேர் நின்று கொண்டிருந்ததால், சேதமடையும் நிலை ஏற்பட்டது. அதன்பின், தேர் ஷெட் உயரம் அதிகமாக இருப்பதால், தகர சீட் அமைத்தால், வேகமாக காற்று வீசும்போது, தகரம் கீழே விழுந்தால், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, நான்கு புறங்களிலும், அடைக்கப்படாமலே இருந்தது. இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப்பின், கூடுதலாக, 40 லட்சம் ரூபாய் மதிப்பில், தேர் ஷெட்டின் நான்கு புறங்களிலும், பைபர் கண்ணாடி அமைக்க டெண்டர் விடப்பட்டது. தற்போது, தேர் ஷெட்டிற்கு, நான்கு புறங்களும், பைபர் கண்ணாடி அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் விமலா கூறுகையில்,"தேர் ஷெட்டின் நான்கு புறங்களிலும், பைபர் கண்ணாடி அமைக்கும் பணி நடந்து வருகிறது. 15 நாட்களில் பணிகள் முடிவடையும்,"என்றார்.