பதிவு செய்த நாள்
24
ஜூலை
2023
10:07
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடந்தது. நாளை குண்டம் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் ஆடி குண்டம் திருவிழா, கடந்த,18ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. நேற்று காலை கொடியேற்றம் வைபவம் நடந்தது. முன்னதாக தேக்கம்பட்டி ஊர் பொதுமக்கள், சிங்க உருவம் பொறித்த, கொடியை பச்சை மூங்கிலில் கட்டி, மேளதாளங்கள் முழங்க, ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். பவானி ஆற்றின் கரையோரம் உள்ள முத்தமிழ் விநாயகர் கோவிலில், கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவில் சார்பில், தேக்கம்பட்டி ஊர் மக்களை, விநாயகர் கோவிலில் இருந்து, அம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றினர். அதன் பின்னர் கோவிலில் யாக வேள்வி பூஜை நடந்தது. இதில் தேக்கம்பட்டி கிராம மக்கள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாளை குண்டம் விழா: இன்று மாலை பொங்கல் வைத்து, குண்டம் திறக்கப்படுகிறது. நாளை (25ம் தேதி) அதிகாலை, 3:00 மணிக்கு, பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து, 26ல் மாவிளக்கு பூஜையும், அலகு குத்தி தேர் இழுத்தலும், பூ பல்லக்கில் அம்மன் திருவிழாவும், நடைபெற உள்ளது. 27ம் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் பரிவேட்டையும், வானவேடிக்கையும் நடைபெற உள்ளது. 28ம் தேதி மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டும், கொடி இறக்கமும் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி மறு பூஜை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, பரம்பரை அறங்காவலர் வசந்தா ஆகியோர் செய்து வருகின்றனர்.