பதிவு செய்த நாள்
01
ஆக
2023
01:08
தென்காசி: குற்றாலம், குற்றாலநாதர் கோவிலுக்கு சொந்தமான, 500 ஆண்டுகள் பழமையான உலோக பாத்திரங்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் கடத்தி, ஏலம் போட்டனர்.
அறநிலையத் துறையினர் அதை கண்டு கொள்ளாமல் பெயரளவுக்கு சிலை கடத்தல் தடுப்பு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம், குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் திருவிழா நாட்களில் கட்டளை செய்வதற்காக, 500 ஆண்டுகளுக்கு முன், சொக்கம்பட்டி ஜமீன் தரப்பில் செம்பு, பித்தளை, வெண்கல பாத்திரங்கள் வழங்கி உள்ளனர். அதை, கோவிலுக்கு சொந்தமான கல் மண்டபத்தில் பாதுகாத்தனர். பல ஆண்டுகளுக்கு முன் அரசு ஆணைப்படி, கல் மண்டபம், அறநிலையத்துறையிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதை எதிர்த்து அறநிலையத் துறை வழக்கு தொடர்ந்தது. கல் மண்டபத்தை நிர்வகிக்கும் பொறுப்பை, அறநிலையத் துறைக்கு பெற்றனர். இருப்பினும், கல் மண்டபம் குற்றாலம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் இருந்தது. சில நாட்களுக்கு முன் அங்கிருந்த பழமையான பாத்திரங்களை, டிராக்டரில் கடத்திச் சென்று ஏலம் விட்டனர். பேரூராட்சி நிர்வாகத்தினர் பாத்திரங்களை எடுத்துச் செல்வதை ஹிந்து முன்னணி அமைப்பினர் வீடியோ பதிவு செய்தனர். உடனடியாக கோவில் நிர்வாகத்திலும் புகார் செய்தனர். அறநிலையத்துறையினர் கண்டு கொள்ளவில்லை.உடனடியாக போலீசில் புகார் செய்யவில்லை. ஹிந்து முன்னணி பதிவு செய்த பாத்திரங்கள் கடத்தும் வீடியோ, சமூகவலைதளங்களில் பரவியது. இதையடுத்து, அறநிலையத் துறை உதவி ஆணையர் கண்ணதாசன், தங்கள் பொறுப்பை தட்டிக் கழிக்கும் நோக்கில், பெயரளவிற்கு திருநெல்வேலி மாவட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்துள்ளார். இருப்பினும், பாத்திரங்கள் மீட்கப்படவில்லை. பாத்திரங்களை மீட்டு கோவிலில் பாதுகாக்க வேண்டும். கடத்தி விற்பனை செய்த இரு துறையினர் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஹிந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.