இன்று ஆடிப்பெருக்கு ; காவிரித்தாயின் அருளால் அனைவருக்கும் வளமான வாழ்வு அமையட்டும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2023 07:08
புனித நீராடலுக்குரிய நாட்களில் ஒன்றாக ஆடிப்பெருக்கு அமைந்துள்ளது. அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி 18ம்பெருக்கு ஆற்றங்கரைகளில் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கில் காவிரி தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பானதாகும். பெருகி ஓடும் காவிரி நீரைப் போல வாழ்விலும் வளம் பொங்கவேண்டும் என்பதே இந்நீராடலின் நோக்கம். இன்று ஆடிப்பெருக்கு நாயகர் ரங்கநாதரை வணங்க நல்லதே நடக்கும்.
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பி காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி 18-ல் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள காவிரி, பெண்ணை, பொருணை ஆகிய மூன்று நதிகளிலும் ஆடிப் பதினெட்டு கொண்டாடுவதை, மூவாறு பதினெட்டு எனக் குறிப்பிடுவார்கள். மங்களச் சரடு: தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோயிலின் நடை ஆடிப்பதினெட்டு அன்று அதிகாலையில் திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும் ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.