பதிவு செய்த நாள்
03
ஆக
2023
07:08
திருச்சி: ஆடிப்பெருக்கு விழா காவிரி கரையோர பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலைலேயே வந்து புனித நீராடினர். தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஆடி, 18ம் பெருக்கு பண்டிகை. ஆடிப்பெருக்கு பண்டிகை காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் அதிகாலை, 4 மணி முதலே மக்கள் கூட்டம் வரத்துவங்கியது. திருமணமான பெண்கள், புதுமண தம்பதியர், கன்னி பெண்கள் என அனைவரும் முளைப்பாரி, மங்கல பூஜை பொருட்கள், திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகள் ஆகியவற்றை எடுத்து வந்திருந்தனர். காவிரியில் நீராடி புத்தாடை அணிந்து முளைப்பாரி, திருமண மாலைகளை காவிரி ஆற்றில் விட்டனர். பின் படித்துறையில் வாழை இலை போட்டு, அதில் பச்சரிசி, மஞ்சள், குங்குமம், வெல்லம், தேங்காய், பூ, பழம் வைத்து பூஜை செய்து காவிரிக்கு கற்பூர ஆரத்தி காட்டி குடும்பத்துடன் வணங்கினர்.
காவிரி தாயை நினைத்துக் கொண்டு சுமங்கலி பெண்கள் புதிய தாலி சரட்டை மாற்றிக்கொண்டனர். திருமணமாகாத இளைஞர்களும், கன்னிப்பெண்களும் திரண்டு வந்து காவிரித்தாய்க்கு பூஜை செய்து ஆற்றங்கரையில் உள்ள வேப்பமரத்தில் மஞ்சள் நூலை சுற்றி வழிபட்டனர். பின் ஸ்ரீரங்கநாதர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபட்டனர்.இதே போல் அய்யாளம்மன் படித்துறை, சிந்தாமணி படித்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு, கல்லணை உள்ளிட்ட காவிரி பாயும் இடங்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி பூஜை செய்தனர். படித்துறையில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.