பதிவு செய்த நாள்
07
ஆக
2023
08:08
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், 58 அடியாக சரிந்த நிலையில் ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலை முழுதும் வெளியே தெரிகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பண்ணவாடி கிராமம் உள்ளது. இங்கு அப்பகுதி மக்கள் வழிபட்ட ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் தேவாலயம் இருந்தது. மேட்டூர் அணை கட்டிய பிறகு, இப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு, அணையில் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. இதனால் பண்ணவாடி மட்டுமின்றி கோட்டையூர், செட்டிப்பட்டி கிராமங்கள் அணை நீர்த்தேக்க பகுதிகளாக மாறி, தண்ணீரில் மூழ்கின. ஜலகண்டேஸ்வரர் கோவில், தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்கள் மூழ்கின.
மேட்டூர் அணை நீர்மட்டம் சரியும்போது, தேவாலய கோபுரம், ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை தென்படும். தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம், 57.94 அடியாக உள்ளது. இதனால் அணை நீர்பிடிப்பு பகுதி பல கி.மீ.,க்கு வறண்டு காட்சியளிக்கிறது. இந்நிலையில் நந்தி சிலை முழுமையாக காட்சியளித்தது. தேவாலய கோபுரத்தின் மேற்பகுதியும் தெரிகிறது.
நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி நீர் பிடிப்பு பகுதியில், நேற்று முன்தினம் மாலை முதல் மழை பெய்தது. அத்துடன் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று காலை அணைக்கு, 2,406 கனஅடியாக இருந்த நீர்வவத்து, 2,862 கனஅடியாக மாலையில் அதிகரித்தது. அணை நீர்மட்டம், 57.94 அடி, நீர் இருப்பு, 23.17 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, 9,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.