பதிவு செய்த நாள்
07
ஆக
2023
11:08
பழநி: பழநி கோயிலுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தை திருட முயற்சி நடப்பதாக ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.
பழனி கோயிலுக்கு சொந்தமான 220 ஏக்கர் நிலத்தை திருட முயற்சி இதனால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலை உருவாகும் என காடேஸ்வர சுப்ரமணியம் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது,"ஆறு கால பூஜைகள் கோயில்களில் சிறப்பாக நடைபெற வேண்டும். திருவிழாக்கள் குறை இன்றி நடைபெற வேண்டும். மக்களின் பசிப்போக்கும் அன்னதானம் வழங்க வேண்டும். கலை, கலாச்சாரம், பசு பாதுகாப்பு, விவசாயம் உள்ளிட்ட நற்பணிகள் நடைபெற கோயில் நிலங்கள் தானமாக கொடுக்கப்பட்டது.
அந்த வகையில் பழநி முருகன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பக்தர்கள் தானமாக வழங்கி உள்ளனர். அதில் ஒரு பகுதியாக ஒட்டன்சத்திரம்,கள்ளிமந்தயம், கிராமத்தில் 220 ஏக்கர் விவசாய நிலம், பழநி முருகப் பெருமானுக்கு சொந்தமானது. அந்நிலத்தில் கோசாலை அமைக்கப்பட்டு, பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்களை ஹிந்து சமய அறநிலை துறை பராமரித்து வருகிறது. தற்போது முருகப்பெருமானின் நிலத்தை அபகரிக்க தமிழக அரசு சூழ்ச்சி செய்து வருகிறது. 1200 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கிறோம், என்ற பெயரில் கோசாலை அமைந்துள்ள பழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான 220 ஏக்கர் நிலம் உட்பட்ட கள்ளிமந்தயம் ,தேவத்தூர், சிக்க நாயக்கன் பட்டி விவசாய நிலங்கள் சுமார் 1200 ஏக்கர் கையகப்படுத்த முன்னெடுப்புகளை அரசு செய்து வருகிறது. கடந்த ஜூலை 20 அன்று மாவட்ட ஆட்சியர், பழநி ஆர்.டி.ஓ விற்கு முன்மொழிவுகளை வழங்கும்படி உத்தரவு விட்டுள்ளார். அரசின் இந்த முயற்சி வெற்றி பெற்றால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து விவசாயத் தொழிலை விட்டு வெளியேறும் நிலை உருவாகும்.
தி.மு.க., எதிர்கட்சியாக இருக்கும்போது, இயங்கி வந்த பல ஆயிரம் பேருக்கு வேலை வழங்கிய ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடிய மூட வலியுறுத்தி போராட்டம் நடந்தது. தற்போது கோயில் நிலம், விவசாய நிலங்களை அபகரித்து தொழிற்சாலை அமைக்க தி.மு.க., முயற்சிப்பது என்ன நியாயம். தி.மு.க.,வின் போலி விவசாய நாடகம் அம்பலம் ஆகியுள்ளது. விவசாயிகளின், பக்தர்களின் வயிற்றில் அடித்து கோயில் நிலங்களை விவசாய நிலங்களை திருட முயற்சித்தால், ஹிந்து முன்னணி வேடிக்கை பார்க்காது. சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் விவசாய பெருமக்கள் மற்றும் பழநி முருகன் பக்தர்களை ஒருங்கிணைத்து திண்டுக்கல் மாவட்டத்தில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என அரசுக்கு எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறோம்." என தெரிவித்துள்ளார்.