பதிவு செய்த நாள்
08
ஆக
2023
11:08
பெரம்பலுார், பெரம்பலுார் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ஹிந்து கோயில்களில் உள்ள சாமி சிலைகள் 65 உடைக்கப்பட்டு சேதப்படுத்திய சம்பவங்களும் அதை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தான் உடைத்தார்கள் என போலீசார் கைது செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
பெரம்பலுார் மாவட்டத்தில் சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயிலின் உபக்கோவிலான பெரியசாமி மற்றும் செல்லியம்மன் கோவிலில் உள்ள சாமி சிலைகள் 2021 அக். 4ஆம் தேதி சுடுமண்ணால் செய்யப்பட்ட 5 சிலைகள் உடைக்கப்பட்டு முதன் முதலாக சாமி சிலைகள் உடைப்பு சம்பவம் அரங்கேறியது. இதை தொடர்ந்து 8ம் தேதி அதே கிராமத்தில் உள்ள செங்கமலையார் கோவிலில் சுடுமண்ணால் செய்யப்பட்ட 16 அடி உயரம் உள்ள செங்கமலையார் சாமி சிலை 5 அடி உயரமுள்ள சித்தர்கள் சிலை, ஐந்து அடி உயரமுள்ள கொரப்புலியான் சிலை, குதிரை, காளை, வேட்டை நாய் கூட 19 சிலைகள் உடைக்கப்பட்டன. சித்தர் கோயிலில் 2 சிலை, பெரியாண்டவர் கோவிலில் 14 சிலை என சிறுவாச்சூர் கிராமத்தில் மட்டும் சாமி சிலைகள் 40 உடைத்து சேதப்படுத்தப்பட்டன.
2022ல் மேலமாத்துார் பெரியசாமி கோவில் 7 சிலைகள், 2023 பிப்., 17ம் தேதி புதுக்குறிச்சி ஏரிக்கரை ஓரத்தில் அய்யனார் சுவாமி முத்துசாமி கோவில் உள்ள அய்யனார், முத்துசாமி சிலை உட்பட 8 சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டன. இந்நிலையில், 2023ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி செட்டிகுளம் கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ள 3 அடி உயரமுள்ள முருகன் சிலை, மூன்றடி உயரமுள்ள பைரவர் சிலை, மூன்றை அடி உயரமுள்ள கருடாழ்வார் மர வாகன சிலை, நாலடி உயரம் உள்ள சிங்க வாகன சிலை என எட்டு சிலைகளும், கடந்த 7ம் தேதி செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் கிரிவல மண்டபத்தில் சிமெண்ட்டாலான வள்ளி, தெய்வானை சிலைகள் என இதுவரை இந்து சுவாமிகள் சிலைகள் 65 உடைத்து சேதப்படுத்தப்பட்டன. கோயில் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியதாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களான நாதன், செல்வராஜ், பூபதி ஆகியோர் போலீசார் கைது செய்துள்ளனர். பெரம்பலுார் மாவட்டத்தில் இந்து கோவில்கள் சிலைகள் உடைக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலைத்துறையும், மாவட்ட காவல்துறையும் இதை தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்காக உள்ளனர். கோவிலின் புனிதத்தை காக்க வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை வருமானத்தை மட்டுமே பார்க்கிறதே தவிர கோவிலை பாதுகாப்பதில்லை. இந்த சுவாமி விக்கிரக உடைப்பு சம்பவத்திற்கு இந்து சமய அறநிலைத்துறை முழு பொறுப்பு என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாமி சிலைகளை சேதப்படுத்துவதாக போலீசாரால் கைது செய்யப்படும் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். பாதிக்கப்பட்ட நபர்கள் குறிப்பாக இந்து கோயில்களில் உள்ள சாமி சிலைகளை மட்டுமே உடைத்து சேதப்படுத்த காரணம் என்ன? மற்ற மதம் கோயில்களில் அவர்கள் புகுந்து அந்த சாமி சிலைகளை உடைக்காதது ஏன்? மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளிகளா அல்லது கணக்கு காட்டுவதற்காக போலீசார் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கைது செய்கிறார்களா என்பது அந்த சாமிகளுக்கு வெளிச்சம்.
பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள இந்து சுவாமி கோயிலில் உள்ள சாமி சிலைகளை சேதப்படுத்தி மற்ற மதத்தை சேர்ந்த சிலர் இதில் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்களா தங்களது மதக்கடவுளை வழிபட மனமாற்றம் செய்ய இது சிலரின் சூழ்ச்சியாக இருக்குமோ என அச்சம் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களுக்கும் காவலர் நியமிக்க வேண்டும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், சம்பந்தப்பட்ட பகுதி போலீசார் வந்து பணியில் ஈடுபட வேண்டும், இந்து கோயில்களில் உள்ள சாமி சிலைகள் உடைத்து சேதப்படுத்துவதை அரங்கேற்றுவது மதமாற்ற கும்பலின் விஷமத்தனமா என்பதை போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.