பதிவு செய்த நாள்
14
ஆக
2023
06:08
காங்கேயம்: சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில், பசுவுடன் கூடிய கன்று சிலை வைத்து, இன்று முதல் பூஜிக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்களின் கனவில் சிவன்மலை ஆண்டவர் குறிப்பால் உணர்த்தப்படும் பொருள், பெட்டியில் வைத்து பூஜை செய்வது, நுாற்றாண்டு வழக்கமாக உள்ளது. அடுத்த பொருள் வரும் வரை, முந்தைய பொருள் இருக்கும். அதேசமயம் பெட்டியில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது நடப்பதை முன்கூட்டி கணிப்பதாக இருக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடந்த, 1ம் தேதி முதல் விருஷ்ப அஸ்திரம், தனுார் பாண அஸ்திரம், வருண அஸ்திரம், பாசுபத அஸ்திரம், 6 எலுமிச்சம் பழம், 101 ரூபாய் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னை, பட்டவாக்கம், கருக்கா மெயின்ரோட்டை சேர்ந்த முரளிதரன், 40, என்ற பக்தரின் கனவில், பசுவுடன் கன்று வைக்க உத்தரவானது. இதையடுத்து இன்று முதல் பசுவுடன் கூடிய கன்று சிலை இடம் பெற்றுள்ளது. இதனால் கால்நடை வளர்ப்பு தொழில் மேலும் வளர்ச்சி அடையலாம். அல்லது கால்நடை பெருக்கம் அதிகரிக்கலாம் என்றும், பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது.