சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானத்தின் 31வது பிறந்தநாள் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2023 05:08
சிருங்கேரி : சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானத்தின் 31வது பிறந்த நாள் விழா நேற்று 21ம் தேதி சிருங்கேரியில் கொண்டாடப்பட்டது.
ஆதி சங்கரர் தோற்றுவித்த நான்கு ஆம்னாய பீடங்களில் முதன்மையான சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம். இப்பீடத்தின் 36வது பீடாதிபதியாக விளங்கும் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம், ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானத்தை 2015ம் ஆண்டு தமது சீடராக நியமித்தார். இவரது 31ம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, உலக நன்மைக்காக 1331 ஸ்ரீ ருத்ரம் பாராயணம் செய்யப்படும் மஹாருத்ரம் 5 நாட்கள் நடைபெற்றது. 21ம்தேதி காலை ஸ்ரீ சன்னிதானத்தை தரிசிக்க ஆயிரக்கணக்கான சீடர்கள் உலகின் பல பகுதியில் இருந்து வந்திருந்தனர். அன்று மதியம் கார்த்திகை சோம வார விசேஷ பூஜையும், இரவு ஸ்ரீ சந்திர மெளலீஸ்வரர் பூஜையினையும் ஸ்ரீ சன்னிதானம் செய்தார். அதற்கு முன் தினம் கால பைரவர் கோவிலில் சிறப்பு பூஜையினையும் நிகழ்த்தினார்.
விழாவில் பேசிய ஸ்ரீ சன்னிதானம்; ஒவ்வொருவரது வாழ்விலும் குடும்ப வாழ்க்கை எவ்வாறு முக்கியமோ அந்த அளவிற்கு ஆன்மீக வாழ்வும், அவசியம் இருக்க வேண்டும். ஆன்மீக வாழ்வின் முதற்படி இறைவனின் நாம ஜபம், தியானம் ஆகியவைகளாகும். ஆதி சங்கரரின் சுலோகங்களும், உபதேசங்ககளும் இதற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதனை தெரிந்து கொண்டாலே ஆன்மீக வாழ்க்கையில் ஒருவர் முன்னேற முடியும்’ என விவரித்தார்.
தொடர்ந்து பேசிய சிருங்கேரி மடத்தின் முதன்மை அதிகாரி கெளரிசங்கர்; ஜூன் மாதம் 5ம் தேதி ஸ்ரீ சன்னிதானம் காஷ்மீர் டீட்வால் எனும் இடத்தில் நிகழ்த்திய ஸ்ரீ சாரதாம்பாள் விக்ரஹ பிரதிஷ்டை வரலாற்று சிறப்பு பெற்ற ஒன்று என குறிப்பிட்டார். வரும் 2024ம் ஆண்டு ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாசன்னிதானம் சன்யாஸ சுவீகாரம் பெற்று 50 ஆண்டு பூர்த்தியாகும் வருடமாகும். அவ்வருடத்தில் இதன் பொன்விழா ஆண்டு விமரிசையாக கொண்டாடப்படும் எனவும், சிருங்கேரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஈஸ்வர கிரியில் உள்ள மலஹானிகரேஸ்வரர் கோவில், மிகச்சிறந்த கலை அழகுடன் புனருத்தாரணம் செய்யப்பட்டு வருகிறது எனவும், முடிந்தவுடன் அக்கோவில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடக் கலையின் அடையாளமாக விளங்கும் எனவும் தெரிவித்தார்.