கவுதம முனிவரின் மகன் சிரகாரி. சரியான சோம்பேறி. என்ன சொன்னாலும் தாமதமாகத் தான் செய்வான். ஒருசமயம், கவுதமருக்கு, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. சிரகாரியை அழைத்து, டேய்! உன் தாயை வெட்டிக் கொன்று விடு, என உத்தரவு போட்டார். ஜமதக்னியின் உத்தரவை மீற முடியாத பரசுராமனின் நிலைக்கு ஆளானான் சிரகாரி. தாயைக் கொல்வது பாவம், தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதும் உண்மை! என்ன செய்யலாம்? என குழம்பிப்போன அவன், ஒரு ஓரமாக உட்கார்ந்து சிந்திக்க ஆரம்பித்தான். கவுதமர் ஓரிடத்தில் அமர்ந்து நடந்ததை எண்ணி குழம்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இந்திரன் துறவி வேடத்தில் அங்கு வந்தான். பெண்கள் தெய்வங்கள். அவர்கள் மீது காரணமில்லாமல் சந்தேகப்படக் கூடாது. சந்தேகத் தால், ஒரு பெண்ணின் உயிர் போகிறதென்றால் அதை விட அந்த வம்சத்திற்கு கொடிய பாவம் ஏதுமில்லை, என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே அவ்விடத்தைக் கடந்தான். கவுதமரின் மனம் மாறியது. அவர் அவசர அவசரமாக ஓடிவந்தார். மகன் கண்மூடி இருப்பதைப் பார்த்து, தாயை இழந்த துக்கத்தில் அப்படி இருக்கிறானோ என நினைத்துக் கொண்டு, சிரகாரி! உன் தாயைக் கொன்று விட்டாயா? என மனம் படபடக்க கேட்டார். இல்லை அப்பா! அவளைக் கொன்றால் பாவம் ஏற்படுமா? உங்கள் கட்டளையை மீறினால் பாவம் ஏற்படுமா? என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். விடை கிடைத்ததும் அதற்கேற்ப செய்கிறேன், என்றான். அவனது தாமத குணம் அன்னையின் உயிரைக் காப்பாற்றியது. வேகமாக செயலாற்றும் குணமும் வேண்டும், நிதானமாக சிந்தித்து செயல்படும் குணமும் வேண்டும். சமயத்திற்கேற்ப இதைச் செய்தால், நன்மை நிச்சயம்.