பதிவு செய்த நாள்
05
செப்
2023
03:09
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், 10 ஆண்டுகளுக்கு பின், வெள்ளித்தேர் பக்தர்கள் பயன்பாட்டிற்கு நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் கடந்த, 2013ம் ஆண்டு வெள்ளித் தேரின் பாகங்கள் பழுதடைந்தது. இதையடுத்து, 2021ம் ஆண்டு பழுதடைந்த வெள்ளித் தேரை சீரமைக்க கோவில் நிர்வாகம் தீர்மானித்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டது. தொடர்ந்து உபயதாரர் வாயிலாக கடந்த மார்ச்சில் மரத்தேர் மீது வெள்ளித்தகடுகள் பதிக்கும் பணி துவங்கி பத்து நாட்களுக்கு முன் வெள்ளித் தேர் உருவாக்கப்பட்டது. வெள்ளித்தேர் துவக்க விழா நேற்று இரவு மலைக்கோவிலில் நடந்தது. இதில், ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, துணிநுால் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் காந்தி, கோவில் ஆணையர் முரளீதரன், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் ஆகியோர் பங்கேற்று வெள்ளித் தேரை துவக்கி வைத்தனர்.
பின் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: பழுதடைந்த வெள்ளித் தேர், உபயதாரர் மூலம், 19 லட்சம் ரூபாய் மதிப்பில் மரத்தேர் செய்யப்பட்டது. அதன்பின் 4 கோடி ரூபாய் மதிப்பில், 529 கிலோ வெள்ளித் தகடுகள் தேரில் பொருத்தப்பட்டது . கடந்த பத்து ஆண்டுகளுக்கு பின் தற்போது வெள்ளித்தேர் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். இதே கோவிலில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஓடாமல் இருந்த தங்கத்தேரை கடந்தாண்டு சீரமைத்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.