பதிவு செய்த நாள்
05
செப்
2023
06:09
சென்னை, திருச்செந்துார் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய, தங்க நகைகளை உருக்கியதில் கிடைத்த, 168.68 கிலோ தங்கக் கட்டிகள், பாரத ஸ்டேட் வங்கியின் மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, பக்தர்கள் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்திய, பல மாற்று பொன் இனங்கள், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மாலா தலைமையிலான குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டன. நகைகளில் இருந்த அரக்கு, அழுக்கு, போலி கற்கள் மற்றும் இதர உலோகங்கள் நீக்கப்பட்டன. பிரித்தெடுக்கப்பட்ட பல மாற்று பொன் இனங்கள், மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கப்பட்டு, சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டன. அவ்வாறு மாற்றப்பட்ட தங்கக் கட்டிகள் தங்கப் பத்திரமாக, பாரத ஸ்டேட் வங்கி மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டன. இதன் மதிப்பு, 99.77 கோடி ரூபாய். தங்க மதிப்புக்கு வழங்கப்படும் வட்டி வீதம், 2.25 சதவீதம். இதனால், ஆண்டுக்கு வட்டித் தொகையாக 2.25 கோடி ரூபாய் கிடைக்கும். இத்தொகை கோவில் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படும். தங்க முதலீட்டு பத்திரத்தை, நேற்று தலைமைச் செயலகத்தில், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகனிடம், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நேற்றைய நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மாலா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் மணிவாசன், ஹிந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், கமிஷனர் முரளீதரன், பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் கோவிந்த் நாராயணன் கோயல் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
கோவில்களுக்கு கிடைக்கும் ஆண்டு வட்டி; திருச்செந்துார் சுப்பிரமணியசாமி சுவாமி கோவிலுக்கு, 2.25 கோடி ரூபாய், விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு, 24.09 லட்சம் ரூபாய், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு, 1.04 கோடி ரூபாய், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு, 39.13 லட்சம் ரூபாய், காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு காமாட்சியம்மன் கோவிலுக்கு, 39.29 லட்சம் ரூபாய்.