பதிவு செய்த நாள்
14
செப்
2023
06:09
சென்னை: ’தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு மாறாக, விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரும் மனுக்கள் ஏற்கப்படாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புக் குழு பொதுச் செயலர் ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு: வரும், 18 முதல் 22 வரை, கோவை மாவட்டம் சிறுமுகை, மேட்டுப்பாளையம் பகுதியிலும், அதை சுற்றியுள்ள கிராமங்களிலும், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, அபிஷேக ஆராதனை, ஊர்வலம், ஆன்மிக நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் நடத்தப்படும். சிறுமுகை, மேட்டுப்பாளையம் பகுதிகளில், குறைந்தது, 16 இடங்களில் விநாயகர் சிலை அமைக்கவும், விழா கொண்டாடவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஆற்றில் கரைக்கவும் அனுமதி அளிக்கக் கோரி, சிறுமுகை இன்ஸ்பெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது; இதற்கு பதில் இல்லை. மனுவை பரிசீலிக்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கவுந்தம்பாடியில், 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டம் குன்னத்துார் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட, 13 இடங்களிலும் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலங்களுக்கும் அனுமதி கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தன. போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, ”விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்தந்த பகுதிகளில் சட்ட ஒழுங்கை கருதி, சிலை வைக்க அனுமதி கோரிய மனுக்கள் மீது, போலீசார் அனுமதி அளிக்கின்றனர். கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில், இந்த ஆண்டும் அனுமதிக்கப்படும்,” என்றார். இதையடுத்து, ’தமிழக அரசின் அரசாணைக்கு மாறாக, விநாயகர் சிலை வைக்க அனுமதி கேட்டு மனுக்கள் தாக்கல் செய்தால், அவை ஏற்கப்படாது’ எனத் தெரிவித்து, மனுக்களின் விசாரணையை, நீதிபதி முடித்து வைத்தார். விசாரணையின்போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ”தனக்கு சிலை வைத்து, அதை ஊர்வலமாக எடுத்து செல்லும்படி விநாயகர் கூறவில்லை. இந்த கொண்டாட்டங்களால், மக்களுக்கு என்ன பலன்? விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது. இவை அனைத்தும் என் சொந்த கருத்து,” என்றார்.