பதிவு செய்த நாள்
14
செப்
2023
05:09
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பல்வேறு ஹிந்து அமைப்புகளின் சார்பில், பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா இம்மாதம், 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். இது தவிர, பொது இடங்களில் பெரிய அளவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட, ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. கோவையில் கவுண்டம்பாளையம், தெலுங்கு பாளையம், செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ராஜகணபதி, மயில் மீது விநாயகர் அமர்ந்து இருப்பது போன்ற பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து ஹிந்து அமைப்பினர் கூறுகையில், விநாயகர் சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இருக்க வேண்டும் என, விநாயகர் சிலைகளை தயாரிக்கும் கலைஞர்களிடம் கூறியிருக்கிறோம். அதாவது, தண்ணீரில் எளிதாக கரையும் கிழங்கு மாவு, பேப்பர் கூழ் ஆகியவற்றை பயன்படுத்தி சிலைகள் தயார் செய்யப்படுகின்றன. சிலையின் தாங்கு திறனை உறுதி செய்ய உட்புறத்தில், சவுக்கு கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. சிலைகளை இரண்டு அல்லது மூன்று நாட்கள் காயவைத்து, அதன் பிறகு பேப்பர் ஒட்டி வர்ணம் பூசப்படுகிறது. இதில், செயற்கை ரசாயனங்கள் மற்றும் எனாமல் கலப்பு இல்லை. இரண்டடி முதல், 10 அடி உயரம் வரை பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. விநாயகர் சிலைகள் செய்ய தேவையான மூலப்பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சிலைகளின் விலையும் தற்போது உயர்ந்து உள்ளது. சிறிய சிலைகள், 200 முதல், 2000 ரூபாய் வரையும், 10 அடி உயரம் உடைய சிலைகள் 10 ஆயிரம் ரூபாய் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. கோவை வடக்கு பகுதியில், ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் வைக்கப்படுகின்ற விநாயகர் சிலைகள், திருப்பூரில் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன. அவை கோவை வடக்கு பகுதியில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டு வரப்படுகின்றன. அவற்றை அப்பகுதிகளில் உள்ள கோயில்களில் பத்திரமாக வைத்து, விநாயகர் சதுர்த்தி நாளான, 18ம் தேதி காலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றனர்.