பதிவு செய்த நாள்
18
செப்
2023
11:09
சபரிமலை : புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. வரும், 22ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
இன்று மாலை, 5:00 மணிக்கு மேல், சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்; வேறு பூஜைகள் கிடையாது. இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்து நிர்மால்ய தரிசனம், அபிஷேகத்துக்கு பின் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய்அபிஷேகத்தை துவக்கி வைப்பார். தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெறும்.
வரும், 22ம் தேதி வரை ஐந்து நாட்களிலும் காலையில் உஷ பூஜை, மதியம் களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, தொடர்ந்து புஷ்பாபிஷேகம், இரவு அத்தாழ பூஜை நடைபெறும். எல்லா நாட்களும் இரவு, 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். 22ம் தேதி இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு வாயிலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கிடையில், கேரளாவில் ’நிபா’ வைரஸ் பரவல் இருப்பதால் சபரிமலை வரும் பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடும்படி, அம்மாநில அரசுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தேவசம் ஆணையருடன் கலந்தாலோசித்து தேவையான முடிவுகளை எடுக்குமாறு சுகாதாரத் துறை செயலரை அறிவுறுத்தி உள்ளது. எனினும், நேற்று மாலை வரை தேவசம்போர்டு இது சம்பந்தமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.