பதிவு செய்த நாள்
18
செப்
2023
11:09
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு விநாயகருக்கு உண்டு. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவர் இறைவன் என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர் இவரே. வீதியெங்கும் சிறியது முதல் பெரியது வரை இவருக்குத் தான் கோயில் இருக்கும். சின்ன கிராமமாக இருந்தாலும் குளக்கரையில் குடியிருப்பார். மழையையும், வெயிலையும் ஒரு பொருட்டாக நினைக்காமல் வெட்ட வெளியில் ஹாயாக காட்சி தருபவர். ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் என்று எங்கு கிளம்பினாலும் செல்லும் வழியில் பிள்ளையாரைத் தரிசிக்காமல் செல்ல முடியாது. அது மட்டுமல்ல! இரண்டு அருகம்புல் அல்லது யாருமே பயன்படுத்தாத எருக்கம்பூவில் நான்கை அவர் மீது தூவி விட்டால் போதும். மனம் குளிர்ந்து போவார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட்ட மணைப்பலகையில் விநாயகர் சிலைகளை வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைத்தனர். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, விளக்குகளை ஏற்றி பூஜை செய்தனர். மதுரை, வேடர்புளியங்குளம், பகுதியில் சிறுவர், சிறுமியர் சேர்ந்து, விநாயகர் வைத்து வழிபட்டனர். மதுரை மற்றும் அனைத்து கோயில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.